தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 22.11.2014 அன்று நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவிப்பு

வெள்ளி, 21 நவம்பர், 2014

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை 22.11.2014 நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு–கர்நாடகா எல்லை பகுதியான ஆடு தாண்டும்பாறை என்ற மேகதாது என்ற இடத்தில் மீண்டும் அணை கட்டப்போவதாக கர்நாடகா அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை (22–ந்தேதி) நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2 புதிய அணைகள் கட்டுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் அருகே 4 தடுப்பணைகள் கட்டவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

மேகேதாட்டுவில் 2 புதிய அணைகள் கட்டுவதன் மூலம் நீர்மின்நிலையம், பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், மண்டியா மாவட்ட கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் ஆகிய 3 தேவைகளை நிறைவேற்ற கர்நாடகா மறைமுகமாக திட்டமிட்டுள்ளது.

தற்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அனைத்து விவசாய சங்கங்களும் நாளை 22.11.2014 முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன.

தமிழர் தம் வாழ்வுரிமைக்கான இந்த போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதுடன் இந்த போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP