மாவீரர் நாள் கொண்டாட தமிழக முதல்வர் அவர்கள் உடனே தலையிட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 26 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று 26.11.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:


மாவீரர் நாள் நிகழ்வுகளை திட்டமிட்டே சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகள்!

தமிழக அரசுக்கும் அதிமுகவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் சதி!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனே தலையிட கோரிக்கை!
------------------------------------------------------------

உலகம் முழுவதும் 65 நாடுகளில் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த போராளிகள், அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலோ பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் வேண்டுமென்றே தடை விதித்தும் உணர்வாளர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியிருப்பதும் பெருங்கொந்தளிப்பை உலகத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் வைத்திருந்த பதாகைகளை அகற்றியதுடன் அந்த இயக்கத்தின் மூத்த நிர்வாகி தோழர் உமாபதியை கொடூரமாக காவல்துறையினர் தாக்கியும் உள்ளனர்.

புதுக்கோட்டையில் ஈழ ஏதிலியர் முகாமில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற இருந்தது. அதைக் கூட இன்றைய நாளில் நடத்தக் கூடாது என்று கூறி காவல்துறை தடை விதித்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட ஏதிலியர் மீது தடியடி நடத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது.

இதேபோல் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த முயன்றதற்காக நாமக்கல், திருப்பூர் என பல இடங்களிலும் தமிழின உணர்வாளர்கள் பலரும் இன்று கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைக்காக தங்களது உயிரை ஆகுதியாக்கி வீரமரணம் அடைந்தோருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் எந்த ஒரு தடையும் ஒருபோதும் விதித்தது. தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட அதற்கு ஆதரவாக கருத்துகளை பேசுவதற்கு நாட்டின் உச்சநீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது.  இன்று கூட இது தொடர்பான பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்த நிலையில் தமிழீழத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஆதரவாக இருக்கும் அண்ணா திமுக பொதுச்செயலர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதி நோக்கத்துடன் இத்தகைய அடக்குமுறைகளை சில இடங்களில் ஏவிவிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

முந்தைய திமுக அரசு இதேபோல்தான் தமிழின உணர்வாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு தமிழர் மனங்களில் வெறுப்புணர்வை தானே விளைவித்துக் கொண்டது. அதேபோன்றதொரு நிலையை உருவாக்கி அதிமுக அரசுக்கு சிக்கலையும் அவப்பெயரையும் ஏற்படுத்துவதற்காக சில காவல்துறை அதிகாரிகள் இத்தகைய அத்துமீறல்களையும் தாக்குதல்களையும் வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய ஒடுக்குமுறைகள் உலகத் தமிழர் மனங்களில் பெரும் துயரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலகத் தமிழர்களுக்கு ஆதரவாக அணுசரனையாக தமிழ்நாட்டு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை தகர்த்துவிடும் வகையில் இந்த ஒரு சில அதிகாரிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இதனால் இந்த பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் எந்தவித அடக்குமுறை- ஒடுக்குமுறை இல்லாமல் அமைதியான முறையில் தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நாள் நிகழ்வுகளை நடத்த உரிய அனுமதி அளித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP