ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு - மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு உடனே மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
வியாழன், 30 அக்டோபர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
2011ஆம் ஆண்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்து தற்போது கொழும்பு உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதாக வெளியாகி இருக்கும் பேரதிர்ச்சியளிக்கிறது.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாடுவின் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் நெடுந்தீவு கடற்பரப்பில் போதைப் பொருள் கடத்தினர் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 3 ஆண்டுகாலம் அவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்தது.
இந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை தமிழக மீனவ உறவுகள் நடத்திப் பார்த்தும் மத்திய அரசு தலையிடவே இல்லை. இதன் விளைவாகத்தான் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ளது கொடுமை அரங்கேறியுள்ளது.
தூக்குத் தண்டனை என்ற முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது என்பது உலகில் எங்குமே நடந்திராக அநியாயத்தின் அக்கிரமத்தின் உச்சகட்டம். இந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் போனதன் விளைவுதான் இன்று எங்கள் மீனவர்கள் தூக்குக் கொட்டடியில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தூக்கு மர நிழலில் இருக்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் நலனுக்காக உரத்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் தூக்கு மேடையில் நிற்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக