இலங்கையில் மலையகத் தமிழர்கள் வாழும்பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 தமிழர்கள் மண்ணில் புதைந்த பெருங்கொடுமை - இந்தியா இரங்கல் தெரிவிக்காதது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

வியாழன், 30 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த பெருந்தோட்டம் என்ற மலையகத் தமிழர்கள் வாழும் கிராமம் ஒட்டுமொத்தமாக நேற்று காலை 7 மணியளவில் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனது.

இதில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 400 தமிழர்கள் மண்ணில் புதைந்து போயினர் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இதுவரை 150 தமிழர்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 300 தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து மடிந்திருக்கலாம் என்ற பேரிடியான செய்திகள் வருகின்றன. இந்திய -இலங்கை அரசுகளின் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் இந்திய- இலங்கை மண்ணில் தமிழ்ச் சமூகம் பெருந்துயரை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நூற்றாண்டுகளாக கொத்தடிமைகளாக இலங்கையின் மலையகத்தில் அடிப்படை வசதிகளற்ற கேட்பாரற்ற நிலையில் பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இயற்கையும் இப்போது கொடுந்துயருக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையின் மலையகப் பகுதி பெரும் நிலச்சரிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எத்தனையோ அமைப்புகள் எச்சரித்த போதும் சிங்களப் பேரினவாத அரசு மலையகத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவில்லை. மலையகத் தமிழர்களின் இந்த பெருந்துயரத்துக்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்த ஓரிருவர் வெளிநாட்டில் தாக்கப்பட்டால் துடிதுடித்தெழும் இந்திய மத்திய அரசே! குடும்பம் குடும்பமாக இலங்கையின் மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போன நிலையில் ஒரு அதிர்ச்சியையும் இரங்கலையும் கூட தெரிவிக்கவில்லை..மீட்புப் பணிகளில் ஈடுபட முனைப்பு காட்டவில்லை என்பது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது.

மலையகத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தித் தரவும் தேவையான நிவாரண நிதி உதவி வழங்கவும் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு உடனே வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP