தமிழகத்தில் சமன்படுத்திய ஆவின் பால் விலை ரூ.10 உயர்வு - தமிழக அரசு விலை உயர்வை பாதியளவு குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
சனி, 25 அக்டோபர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆவின் பால் விலை உயர்வு- தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அட்டைதாரர்களுக்கான சமன்படுத்திய பால் விற்பனை விலை ரூ 10 என்ற அளவுக்கு உயர்த்தி மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். இது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.
விலை வாசி உயர்வால் பெரும் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் பால் உற்பத்தியாளர்கள் நலனைக் கொண்டு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்பது சரியான நடவடிக்கைதான். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 23 ல் இருந்து ரூ 28 ஆகவும் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ31 ல் இருந்து ரூ35 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த கொள்முதல் விலை உயர்வின் அடிப்படையில் சமன்படுத்திய பால் விற்பனை விலை ரூ 24 ல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எளிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். 3 ஆண்டுகளுக்குப் பின்னரான விற்பனை விலை உயர்வாக இருந்தாலும் ரூ10 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.
இத்தகைய விலை உயர்வை எளிய அடித்தட்டு மக்களால் சமாளிக்க முடியாது. இதனால் இந்த ஆவின் பால் விற்பனை ரூ10 என்கிற அதிகப்படியான விலையை தமிழக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
ஏழை எளிய மக்கள் நலன் காக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசானது இந்த கோரிக்கையை தாயுள்ளத்துடன் பரிசீலித்து விலை உயர்வை பாதியவாவது குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக