லைக்காவின் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை

திங்கள், 13 அக்டோபர், 2014

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அரங்கில் இன்று 13.10.2014 நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை கு. ராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

"'கத்தி' படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், மதிக்காமல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். 'கத்தி' படத்தை பொறுத்தவரை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் பேசி படத்தை வாங்கி வெளியிடாதீர்கள் என்று வலியுறுத்த இருக்கிறோம். ராஜபக்சே ஆதரவாளார்களால் தயாரிக்கப்பட்ட படம் என்ற ஆவணத்தை கொடுத்து தயவு செய்து படத்தை வெளியிடாதீர்கள் என்று கூற இருக்கிறோம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் இருக்கிற கட்சிகள் அனைத்துமே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருப்பவர்கள் அங்கிருக்கும் திரையரங்குகள், விநியோகஸ்தர்களை சந்தித்து திரையிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறோம்.லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனே எனக்கும் இலங்கை விமானத் துறைக்கு வர்த்தகத் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புதம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்? லைக்கா நிறுவனம் வெளியிடாமால், வேறு ஒரு நிறுவனம் 'கத்தி' படத்தை வெளியிட்டால் எங்களது போராட்டம் குறித்து பரிசீலனை பண்ணுவோம். ஜெயா டி.வி தொலைக்காட்சி நிறுவனமும் இப்படத்தை வாங்கவில்லை. டி.வி நிர்வாகத்திடம் பேசியதற்கு தேவையில்லாமல் எங்களது பெயரை இழுக்கிறார்கள் என்றும், நாங்கள் வாங்கிவிட்டோம் என்பது பொய்யான செய்தி என்று கூறினார்கள். ஜெயா டி.வி வாங்கி விட்டது என்று படக்குழு கூறி வருவது ஒரு ராஜதந்திர நடவடிக்கை.

விஜய் சொந்தமாக வாங்கி வெளியிடட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. லைக்கா நிறுவனர் எங்களது 2 நாள் வருமானமே 'கத்தி' திரைப்படம் என்று கூறுகிறார் அல்லவா, அப்படியென்றால் வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. மீறி திரைக்கு வந்தால், ஜனநாயக ரீதியில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சுய விளம்பரத்திற்காக 'கத்தி' படத்தை நாங்க எதிர்க்கவில்லை" என்று கூறினார்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP