பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன்
திங்கள், 5 டிசம்பர், 2011
பண்ருட்டி:
பண்ருட்டி தி.வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசு சார்பில் எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நவம்பர் 23-ம் தேதியில் இருந்து திடீரென பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தமிழர் விடுதலைப் படையினர் 2 பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்களாலும் எனக்கு ஆபத்து நேரிடலாம். கட்சி முன்விரோதம் காரணமாகவும் எனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். இதனாலும் எனக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே எனக்கு போதுமான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். உயர்நீதிமன்றம் உரிய பாதுகாப்பை வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்.
அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ரத்துசெய்துள்ளது. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி வருகிறது. இதனால் 10 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.பஸ் கட்டணம், பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.பலத்த மழையால் 15 மாவட்டங்களில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.முதல்வர் நினைத்தால் பூரண மதுவிலக்கை கொண்டுவரலாம். ஆனால் மதுக்கடைகளில் விற்பனையை அதிகரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் எதிர்கால சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கூடாது என கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் போராடியிருக்கிறேன். அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்கள் விவசாயம் பயிரிடுவதற்கு பி.டி.ரக விதைகளைக் கொடுப்பார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படும். அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால் மக்கள் புரட்சி ஏற்படும். இவ்வாறு வேல்முருகன் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக