"தந்தையும் தம்பியும்" நூல் வெளியீட்டு விழா: தி.வேல்முருகன் முதல் பிரதியை பெறுகிறார்
வெள்ளி, 2 டிசம்பர், 2011
தந்தையும்... தம்பியும்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பா.ம.க.,முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகனும், தி.மு.க.பரிதியும் பங்கேற்பதால், இந்த விழாவில் பரபரப்பான தகவல் வெளிவரும் என்ற பரபரப்பு, அரசியல் வட்டாரத்தில் தொற்றியுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டில் தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டவர் வைகோ. தற்போது அவர் ம.தி.மு.க., பொதுச் செயலராக உள்ளார். தி.மு.க.,வின் துணை பொதுச் செயலராகவும், துணை சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் பரிதி இளம்வழுதி.
இந்நிலையில், "தந்தையும்... தம்பியும்' என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் இன்று நடக்கிறது. இந்த விழாவில், திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கொளத்தூர் மணி தலைமை வகிக்கிறார். தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நூலின் முதல் பிரதியை வெளியிட, தி.மு.க. இருந்து வரும் பரிதியும், பா.ம.க.,விலிருந்து வெளியேறி புதுக்கட்சியை துவக்கவுள்ள முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகனும் பெற்றுக் கொள்கின்றனர்.
மூவரும் நூல் வெளியீட்டின் மூலம் இணைவதால் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நூலின் அழைப்பிதழில், "தந்தையால் திரளுவோம், தம்பியாய் எழுவோம்' என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தந்தை யார்? தம்பி யார்? என்ற கேள்வியும், வைகோவும், பரிதியும் ஒரே மேடையில் கைகோர்க்க இருப்பதால், பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக