பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

புதன், 19 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (19.02.2014) வெளியிட்டுள்ள அறிக்கை:

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 பேரும் இதுவரை அனுபவித்துள்ள சிறை தண்டனையை கணக்கில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433–வது பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்ட ரீதியான வகையிலும் இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கர்நாடக சிறையில் வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் தண்டனையை இரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல நாட்களாகிவிட்டன. இது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் நான்கு தமிழர்களின் தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வரை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP