தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - பண்ருட்டி தி.வேல்முருகன்
வெள்ளி, 20 ஜனவரி, 2012
நன்றி : ஞானசேகர்
முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், "தமிழக வாழ்வுரிமை கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கியிருக்கிறார். இக்கட்சியின் நிறுவனராக வேல்முருகனும், தலைவராக பேராசிரியர் தீரனும், மற்ற மாநில பொறுப்புகளில் பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேல்முருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
* தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கம் என எதை முன்னிறுத்துகிறீகள்?
தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட கூறுகளில் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைப் பேணி காக்கவும், தன்னலம் நீக்கி தமிழர் களின் நலன் காக்கவும் உருவாக்கப்பட்டி ருப்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழகத்திலே தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயரை தேர்வு செய்தோம். இது தவிர, சாதி, மதம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற... தன்மானம்- சுய மரியாதை இழந்து தவிக்கின்ற... மக்களை அணி சேர்த்து அவர்களை போர்க்குணம் மிக்கவர்களாக வார்த்தெடுப்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம்.
* பா.ம.க.விலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் நீக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், தீரன், பு.தா.இளங்கோவன் உள்ளிட்ட பலர், புதிய கட்சி துவங்கி நடத்தியதும் பிறகு கட்சியை கலைத்துவிட்டு வேறு ஒரு கட்சியில் இணைந்ததும் நடந்திருக்கிறது. அந்த வரிசையில் நீங்களும் இணைந்துவிடுவீர்கள் என்கிறார்களே?
வன்னியர் சங்கம் தொடங்கி பா.ம.க.உருவாக்கப் பட்டது வரை... கடந்த 27 ஆண்டு காலமாக பொது வாழ்க் கையில் இருக்கிறேன். நீங்கள் கூறிய தலைவர்களை பா.ம.க.விலிருந்து நீக்க டாக்டர் ராமதாஸ் முடிவெடுத்த போது, "அவர்களை நீக்கக்கூடாது, நீக்கினால் பா.ம.க. பலகீனப்படும்' என்று சொல்லி நீக்கத்தை எதிர்த்தவன் நான். ஆனால் நீக்கத்திற்கு எதிர்வினை இருப்பதைப் பற்றி ஆலோசிக்காமல், எடுத்த முடிவை செயல்படுத்தினார் ராமதாஸ். ஆனால் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொருளாதார ரீதியாக வலிமையும் பா.ம.க. பெற்றிருந்ததால் பலர் நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி பலகீனமாகவில்லை. அதனால் ராமதாஸை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர்கள் அதனை கலைத்துவிட்டோ அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்தோ தங்களின் பொதுவாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
ஆனால் இந்த வேல்முருகன் அப்படி அல்ல. பா.ம.க. தலைமையால் "போகக்கூடாது.... கலந்துகொள்ளக் கூடாது' என்று கட்டளையிடப் பட்ட நிலையிலும் தமிழக தமிழர் களுக்காகவும் ஈழத்தமிழர்களுக் காகவும் பல்வேறு தளங்களில் நின்று அவர்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடி யிருக்கிறேன். கொடி பிடித்திருக்கிறேன். கோஷம் போட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழக மக்களிடம் எனக்கு ஏகோபித்த ஆதரவு பல்கி பெருகியிருக்கிறது. ஆக... அவர்களது வரிசையில் நானும் இணைவேன் என்பது தவறான கண்ணோட்டம்.
* திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்கிற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?
"திராவிட கட்சிகளிடத்தில் கூட்டணி இல்லை' என்கிற ராமதாஸ், தேசிய கட்சிகளைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய முடிவை எடுப்பதற்காகத் தான் தேசிய கட்சியை லாவகமாக தவிர்த்து விட்டார். அதனால் அவரது அரசியல் நிலைப் பாடெல்லாம் உறுதியானது அல்ல. ஆனால் எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் உறுதி யானதாகவே இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்திருக்கிறார்களோ... அல்லது நன்மை செய்வார்கள் என நம்பிக்கை இருக் கிறதோ அவர்களுடன் கூட்டணி உறவுகள் எங்களுக்கு ஏற்படலாம். ஆனால்... இப்போது தான் நாங்கள் புதிய கட்சியை துவக்கியிருக்கிறோம். அதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்போதைய அரசியல் சூழல்களுக்கேற்ப எங்களின் அரசியல் நிலைப்பாடு வகுக்கப் படும். அதுதான் எங்களின் தொடர்ச்சியான அரசியல் நிலைப்பாடாகவும் எதிரொலிக்கும்.
* தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உங்கள் கட்சிக்கான இடம் அரசியல் தளத்தில் எங்கே இருக்கிறது?
வட தமிழகத்தில் பா.ம.க. வலிமையாக இருக்கிறது என்கிறார்கள். இது உண்மை கிடையாது. உருவாக்கப்பட்ட மாயை அது. வட தமிழகத்தில் பா.ம.க.வை வார்த்தெடுத்த, வளர்த்தெடுத்த பெருமை... அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள், ஒன்றிய-கிளைக்கழக நிர்வாகிகள் என பல பேருக்கு உண்டு. அவர்கள் எல்லோரும் இப்போதைக்கு எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அதனால் பா.ம.க.வின் வாக்கு வலிமை அத்தனை யும் "தமிழக வாழ் வுரிமை கட்சி'க்கு இடம் பெயர்ந்து விட்டது. இது ஒரு புறமிருக்க, இருக்கிற கட்சிகளிடத் தில் எல்லாம் நம்பிக்கை இழந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்று கட்சி உருவாகாதா என சிந்திக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் மட்டும் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அந்த சிந்திக்கிற சமுதாயம் எங்களை ஆதரித்து நிற்பதால் அதுவும் எங்களுக்கான அரசியல் இடமாக இருக்கிறது.
* சமூக நீதி, மது ஒழிப்பு, சினிமா மோகம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியமான அரசியல் கொள்கைகளை பா.ம.க. வைத்திருக்கிறது. மற்ற திராவிட கட்சிகளும் ஆரோக்கியமான கோட்பாடுகளை கொண்டிருக் கின்றன. அந்த வகையில் அக்கட்சிகளின் கொள்கையின் நீட்சியாக உங்கள் கொள்கைகள் இருக்குமா? அல்லது ஏதேனும் புதிய கொள்கைகளை வகுத்துள்ளீர்களா?
பா.ம.க.வின் கொள்கைகளை வகுத்தவர் பேராசிரியர் தீரன். அவர், தற்போது எங்கள் கட்சியின் தலைவர். இந்த சூழலில், எங்கள் கட்சிக்கான புதிய கொள்கைகள் விவாதிக்கப்பட்டு உரு வாக்கப்பட்டு வருகிறது. கடலூரில் நடக்க விருக்கும் முதல் மாநில மாநாட்டில் அதனை அறிவிக்கவிருக்கிறோம். அப் போது எங்களின் அரசியல் கொள்கை களைப் பார்த்து அத்தனை அரசியல் கட்சிகளும் வியந்துபோகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக