நெய்வேலி பாமக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்: பாமக தொழிற்சங்கத் தலைமை ஆலோசனை
திங்கள், 20 ஜூன், 2011
நெய்வேலி:
நெய்வேலி பாமக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த பாமக தொழிற்சங்கத் தலைமை ஆலோசித்து வருகின்றனர்.
நெய்வேலி பாமக தொழிற்சங்கம் என்எல்சி நிறுவனத்தின் மூன்றாவது மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பாமக தொழிற்சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாமக விதிமுறைப்படி 2 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகிகளுக்கானத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இச்சங்கத்துக்கான கடந்த தேர்தல் 2009 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவேண்டும்,
ஆனால் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், தொழிற்சங்கத்துக்கான தேர்தலை பாமக தலைமை தள்ளிவைத்தது. இதனிடையே நெய்வேலி பாமக தொழிற்சங்க நிர்வாகிகளில் ஒருசிலர் மறைமுகமாக நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், நெய்வேலி பாமக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து சங்கத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று, சங்கத்துக்கு பாதகம் ஏற்படக்கூடிய வகையில் செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து பாமக தொழிற்சங்கத் தலைமையும், நெய்வேலி பாமக தொழிற்சங்க நிர்வாகிகக்களுக்கான தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
இதுகுறித்து பாமக தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் சைதை சிவா கூறுகையில்,
ஜனநாயக முறைப்படி கண்டிப்பாகத் தேர்தல் நடத்துவோம், சங்க செயல்பாடுகள் குறித்து நேரில் தெரிவிப்போம் என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக