நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி : பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன்
புதன், 30 மார்ச், 2011
நெய்வேலி :
நெய்வேலி நகரம் எந்த அளவிற்கு அடிப்படை வசதிகளுடன் திகழ்கிறதோ அதுபோலவே நெய்வேலி தொகுதி முழுவதையும் மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன் என பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது:
என்.எல்.சி.,யில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத் தருவேன். நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி உருவாக்கிக் கொடுக்கவும், அதில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்விக்கு நடவடிக்கை எடுப்பேன்.
என்.எல்.சி.,யில் ஐ.டி.ஐ., அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், என்.எல்.சி., பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிறுவனத்திற்காக வீடு, நிலம் வழங்கிய, இழந்த மண்ணின் மைந்தர்களுக்கும் என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவேன். நெய்வேலியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் நியாயமான கட்டணத்தை வசூலிக்கச் செய்வேன். தென்குத்து வானதிராயபுரம் கிராமங்களில் சுரங்கங்களுக்கு வைக்கப்படும் வெடியால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த கிராம மக்களுக்கு மாற்று குடியிருப்பு, நஷ்ட ஈடு மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிர்வாகம் தொகுதி வளர்ச்சிக்காக வழங்கும் 2 கோடி ரூபாயை 5 கோடி ரூபாயாக உயர்த்தி பெற்று அதனைக் கொண்டு கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, நெய்வேலி நகரில் உள்ளது போல் தொகுதியை மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பேன்.
முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க பாடுபடுவேன். மேலும், நெய்வேலி பிளாக் 21, 30 தாண்டவன்குப்பம் பகுதியில் வசூலிக்கப்படும் தரை வாடகையை ரத்து செய்து, மின் வசதியை ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக