தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறுவதா? தமிழ்நாட்டு சட்டவிரோதி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்க!! - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டன அறிக்கை
சனி, 13 செப்டம்பர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறுவதா?
தமிழ்நாட்டு சட்டவிரோதி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்க!!
தமிழ்நாடு மற்றும் ஈழம் வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்து மிகச் சரியான போற்றுதலுக்குரிய நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தின் வாழ்வுரிமைகளுக்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் வெற்றி கண்டதுடன் மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு ஆகியவற்றில் மிக மிக உறுதியான நிலைப்பாட்டுடன் தொடர்ந்தும் அவர் போராடி வருகிறார்.
அத்துடன் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியின் சிங்களக் கூட்டாளியான இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி தமிழினத் துரோகிகளையும் எதிரிகளையும் நடுங்க வைத்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
தற்போது, சொட்டு நீரும் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து இன்னுயிரை ஈந்த தியாக தீபமாம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசு அனுமதி கொடுத்துவிட்டதாம். அதனாலேயே தமிழ்நாட்டு அரசு தீவிரவாதிகளின் நண்பனாகிவிட்டது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் இறுமாப்புடன் எழுதுகிறான் துரோகி சுப்பிரமணியன் சுவாமி.
தமிழக மீனவர்களை சிங்கள பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி மீது ஒட்டுமொத்த தமிழ்நாடே கடும் கோபத்தில் இருக்கிறது!
தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இலங்கையுடன் நட்பு பாராட்டிக் கொண்டு தமிழ்நாட்டின் சட்டவிரோதியாக மாறிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்திலே நுழையவே கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தடையும் விதித்துள்ளது.
இப்படி தமிழ்நாட்டு அரசையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் உலகத் தமிழர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் பதுங்கிக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அது இனியும் நடக்காது என்று எச்சரிக்கிறோம்.
இந்த தமிழ்நாட்டின் சட்டவிரோதியான சுப்பிரமணியன் சுவாமியை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்து சிறையில் அடைப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கும். ஆகையால் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக