கடலூர் பகுதியில் சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்
வெள்ளி, 19 ஜூன், 2015
சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
''கடலூர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.06.2015) இரவு வீசிய சூறைக்காற்றினால் கடலூர் அருகே மலைக்கிராமங்களான ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், கண்ணாரபேட்டை வழிசோதனைப்பாளையம், ஓதியடிக்குப்பம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், எம்.புதூர், எஸ்.புதூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் பெரும் சேதமடைந்தன. குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் இந்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளது என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த வாழை மரங்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சேதமடைந்துள்ளது. இதேபோல், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த மழையால், வடக்குப்பம் மற்றும் சின்னவடவாடி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, சாமந்திப்பூ பாதிப்பு அடைந்துள்ளது. முருங்கைகள் வேரோடு சாய்ந்தன. சாமந்திப்பூக்களும் மண்ணில் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக