தமிழர் நீதிப் பேரணியில் ரயில்வே துறையின் உயர் மின்னழுத்த கம்பியின் மின்சாரம் தாக்கியதில் வீரச்சாவடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திரு.வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு தி.வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் - வினோத்தின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

புதன், 29 ஏப்ரல், 2015



தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான தி.வேல்முருகன் இன்று (29.04.2015) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
ஆந்திரத்தில் இருபது ஏழைத் தமிழர்கள் மோதல் என்ற பெயரில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று (28.04.2015) சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தமிழ் இளைஞனின் உயிர் பறிபோன செய்தியை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரத்தைச் சேர்ந்த வினோத் (வயது 21) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துடிப்புமிக்க செயல்வீரர். தன் தோழர்களோடு பேரணியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தவர் இன்று உயிரற்ற உடலாக ஊர் திரும்புகிறார். அவரையும் அவருடைய தம்பியையும் பேரணிக்கு வாழ்த்தி வழியனுப்பிய தாயும் தந்தையும் அண்ணனின் சடலத்தோடு தம்பி மட்டும் திரும்பி வருவதை எப்படித் தாங்குவர்?
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவனாகிய எனக்கும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கும் இது தாங்கவொண்ணாத் துயரம். எளியோனாகிய என் அழைப்பை ஏற்றுத் தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கும் ஒற்றைச் சிந்தனையோடு பேரணியில் பங்கு பெற்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கும் செயல்வீரர்களும் எங்கள் சோகத்தைப் பகிர்ந்து நிற்பது அறிந்து ஆறுதல் கொள்கிறோம்.
வினோதின் சாவு விபத்துதான் என்றாலும் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏப்ரல் 28பேரணிக்கு அனுமதி கேட்டு ஏப்ரல் 11ஆம் நாளே விண்ணப்பித்து விட்ட போதிலும் சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரிகள் கடைசிவரை இழுத்தடித்து விட்டு, ஏப்ரல் 27 இரவுதான் கிண்டி குதிரைப் பந்தயச் சங்கப் பகுதியில் பேரணி நடத்த இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
பல்லாயிரம் மக்கள் அந்தக் குறுகிய பகுதியில் திரண்ட போதிலும் எவ்வித ஆபத்துக் கால முன்னெச்சரிக்கை ஒழுங்கும் செய்யப்படவில்லை. ஒரு தீயணைப்பு ஊர்தியோ அவசர சிகிச்சை ஊர்தியோ எதுவும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. கடுமையான நெரிசலும், காவல்துறை கெடுபிடியும் சேர்ந்து கொள்ள, நகரவோ நிற்கவோ கூட இடம் போதாமல் மின் தொடர்வண்டிப் பாதையோரத் தடுப்பைத் தாண்டி நெருக்கித் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் வினோத். அப்போது அவர் கையிலிருந்த கொடிக் கம்பத்தை யார் மீதும் இடித்து விடாமல் உயர்த்திப்பிடித்த போது மின் கம்பியில் படப் போய், அந்தோ, உயரழுத்த மின்சாரம் அவர் உடலில் பாய்ந்து விட்டது. அரசினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தும், இன்று காலை 7 மணியளவில் வினோதின் உயிர் பிரிந்தது.
வினோதை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயரத்தில் உடன்நின்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கு நன்றி! மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தத் துயர நிகழ்வைப் பாடமாகக் கொண்டு இனிவரும் காலத்தில் காவல்துறையும் மனித உரிமைகளையும் மனித உயிர்களையும் மதித்து நடக்க வேண்டுகிறேன்.


குறிப்பு: இன்று (29.04.2015) 5 மாலை மணியளவில் சிதம்பரத்தில் உள்ள வினோத் அவர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்திட வேண்டுமென தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கேட்டுக்கொள்கின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP