இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றம் - இந்திய மத்திய அரசு சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை
வியாழன், 12 பிப்ரவரி, 2015
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே ! வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்! இந்திய மத்திய அரசே! சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் இன்று (12.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்றது "இனப்படுகொலை"யே என்பதை பிரகடனப்படுத்துகிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமத்தை தமிழீழத்தின் வடக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமையன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
இந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது. அதுவும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை விரிவாக விவரிக்கப்பட்டும் இருக்கிறது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்படும் நிலை உள்ளதாகவும் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரவன் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
8 கோடித் தமிழர் வாழும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இதேபோல் 2013ஆம் ஆண்டே "இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது ஈழத் தமிழரின் தமிழீழத் தாயகப் பிரதேசங்களில் ஒன்றாக வடக்கு மாகாண சபையும் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை நடத்த சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத் தமிழரின் வரலாற்றுத் துயரம் தோய்ந்த நீதிகோரும் இந்தப் பிரகடனத்தை இந்திய மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டு சட்டமன்றமும், தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையும் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை இனியேனும் இந்திய மத்திய அரசு ஏற்று "சிங்களத்தின்" சதிவலையில் சிக்காது தமிழினத்துக்கான நீதி கிடைக்க சர்வதேச விசாரணைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
முதல் கட்டமாக சிங்கள பேரினவாத அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை உடனடியாக இந்தியாவுக்குள் அனுமதி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக