நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்
திங்கள், 12 ஜனவரி, 2015
என்.எல்.சி. நிறுவன விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள அறிக்கை:
என்.எல்.சி. நிறுவன விரிவாக்கத்துக்காக பொதுமக்கள் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக சுற்று வட்டார கிராம மக்களின் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
முதலாவது சுரங்க விரிவாக்கத்துக்காக அம்மேரி, வடக்கு வெள்ளூர், தென்குத்து, வடக்குத்து ஆகிய பகுதிகளில் நில ஆர்ஜிதத்துக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையான அறிவிப்பு இல்லாமல் கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க இந்தக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
1956ஆம் ஆண்டு முதல் நெய்வேலி நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு முறையான பட்டா வழங்கப்படவும் இல்லை. மாற்று குடியிருப்பில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்தும் கொடுக்கப்படவில்லை.
நிலத்தை கையகப்படுத்திக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறது என்.எல்.சி. நிறுவனம். பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல், ஊதிய உயர்வு இல்லாமல் கொத்தடிமைகளைப் போலத்தான் என்.எல்.சி. நிறுவனம் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டு மண்ணில் தமிழரது நிலத்தை கபளீகரம் செய்து தமிழரது உழைப்பில் பெரும் லாபம் சம்பாதிப்பதற்க்கு என்.எல்.சி. நிறுவனம் தமிழர்களை கிள்ளுக்கீரையாகத்தான் நடத்தி வருகிறது. தமிழர்களின் உழைப்பில் பெருத்த லாபம் சம்பாதிக்கும் என்.எல்.சி. நிறுவனம் ராஜஸ்தான் உட்பட வட இந்திய மாநிலங்களில் கிளை நிறுவனங்களை அமைக்கிறது.
தமிழ்நாட்டு மண்ணின் வளமான பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தனியாருக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிற என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்த, உழைக்கிற தமிழர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்தே வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் நிலத்தை கட்டாயமாக அபகரிக்க முயற்சிக்கும் என்.எல்.சி. நிர்வாகம் 1956 முதல் இதுவரை நிலம் கொடுத்தோருக்கு நிலப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். இதை நிறைவேற்றாதவரை நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் ஒரு அடி நிலத்தைக் கூட கையகப்படுத்தவிடமாட்டோம்.
என்.எல்.சி.க்கு நிலம் கொடுப்போரின் குடும்பத்தினருக்கு கையகப்படுத்தப்பட்ட அளவுக்கு சமாமன இடம் தர வேண்டும்; அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியாளராக வேலை வழங்க வேண்டும்; ஒதுக்கீடு செய்யப்படும் மாற்றுக் குடியிருப்பில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.. இவற்றை நிறைவேற்ற முன்வராதவரை மண்ணின் மக்களிடம் இருந்து ஒரு அடி நிலத்தைக் கூட என்.எல்.சி. எடுத்துவிட முடியாது.
இதனால் நெய்வேலி சுற்றுவட்டார மக்களின் அடிப்படை கோரிக்கைகளை என்.எல்.சி. நிறுவனம் ஏற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக