திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீதும், தமிழக செய்தியாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 10 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  இன்று 10.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மீதும் கொடும் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பதற்கும் கடும் கண்டனம்!


ஆந்திரா அரசே! தமிழக செய்தியாளர்களை உடனே விடுதலை செய்க!!


தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தமிழினத்தின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறி இந்தியப் பேரரசு செங்கம்பளம் விரித்து வரவேற்றதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.


திருப்பதிக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று (டிசம்பர் 9)-ந் தேதி மாலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.


இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.


ஆனால் ஆந்திரா காவல்துறையினரோ கருப்புக் கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சுந்தர், கடலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்திரம் குமார், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் சிவா உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையிலடைத்துள்ளது.


இதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் எனப் பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாகத் தாக்கி சிறையிலடைத்துள்ளது. ஆந்திர காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.


அத்துடன் இந்த கருப்புக் கொடி சம்பவத்தை பதிவு செய்ய சென்ற திருத்தமணி மாலை முரசு செய்தியாளர் மீது நேற்று திருப்பதியில் ஆந்திரா காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் டிவி செய்தியாளர் குணசேகரன், தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் காண்டீபன், புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக் கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும் பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் "ராஜபக்சேவின் ஏவல்" படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. 


திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நட்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.


இந்தத் தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பேருந்துகள் எதனையும் அனுமதிக்க மாட்டோம். 


அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.


பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP