காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னையில் 09.08.2014 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இடம்: லாங்ஸ் கார்டன் ரோடு, ஆதித்தனார் சிலை ஜங்ஷன்,எழும்பூர், சென்னை

நாள்: சனிக்கிழமை (09.08.2014), காலை 10 மணி

பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளையும் பொதுமக்களையும் ஆயிரக்கணக்கில் பலி எடுத்திருக்கிற கொடூரம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காஸா பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை இரவென்றும் பகலென்றும் பாராமல் தாக்குதல் நடத்தியது. சர்வதேசம் தடை செய்த அத்தனைவகையாக கொத்து குண்டுகளையும் சராமரியாக வீசி வெறியாட்டம் போட்டது இஸ்ரேல்.

புற்றுநோயை விளைவிக்கும் கிருமிகளைக் கொண்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளையும் அப்பாவி குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி வீசியிருக்கிறது இஸ்ரேல். இந்த குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வழக்கமான போர் பாதிப்பாக இது தெரியவில்லை.. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்திய பெரும் யுத்தம் இது என கொந்தளித்து கூறியிருப்பதெல்லாம் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் மொத்தம் 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 ஆயிரம் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் உச்சகட்ட கொடுமை என்னவெனில், ஐக்கிய நாடுகள் சபை நடத்துகிற பள்ளிகளில் அகதிகளாக தஞ்சமடைந்த பொதுமக்கள் மீது திட்டமிட்டு இலக்கு வைத்து இஸ்ரேல் வெறியாட்டம் போட்ட கொடூரமும் நடந்தேறி இருக்கிறது! இத்தனைக்கும் இஸ்ரேலிடம் 17 முறை இந்த பள்ளிகளில் அகதிகள்தான் தங்கியிருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்த பின்னரும் அந்த பள்ளிகளையே இலக்கு வைத்து கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை ஊடகங்களில் கண்ணீர் கதறலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியே தெரிவிக்கிறார்.

இதன் பின்னரும் இந்தியா உட்பட உலக நாடுகள் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க தயங்குகின்றன. பெயரளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு தங்களது கடமைகள் முடிந்து போனதாக கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது சர்வதேசம். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்திய மத்திய அரசோ, நாடாளுமன்றத்தில் இஸ்ரேலைக் கண்டிக்க முடியாது என்கிறது. மத்திய அமைச்சர்கள் இஸ்ரேலை ஆதரிப்போம் என்று கொக்கரிக்கின்றனர். பாலஸ்தீன விடுதலைக்காக யாசர் அராபத் அவர்களை முதன் முதலாக ஆதரித்த நாடு இந்தியா. இந்தியா எப்போதும் போராடும் பாலஸ்தீனத்து மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. இப்போதும் ஒடுக்கப்படுகிற பாலஸ்தீன மக்களுக்காகவே இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பதுடன், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும் துணிச்சலான நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வெளிப்படையாக பாலஸ்தீன மக்களுக்கான குரலை பிரகடனப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் சனிக்கிழமையன்று (09.08.14) அன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி, சாதி, சமய பேதமின்றி அனைத்து உறவுகளும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் அழைக்கிறேன்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP