முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கேரளாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 23 ஆகஸ்ட், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக அதிகாரிகளை தடுத்து தாக்க முயற்சித்த கேரளாவின் அட்டூழியத்துக்கு கடும் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கேரளா முதலாளிகள் நடத்தும் வணிக நிறுவனங்களையும் கேரளா உயர் அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிடுவோம்!!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை அளவை குறிக்கவும் அணையின் நீர்வரத்தை ஆராயவும் செய்ய தமிழக பொதுப்பணித்துறையின் அதிகாரிகளை கேரளா வனத்துறையினர் ஒன்று திரண்டு தடுத்து மிரட்டி அனுப்பியுள்ளனர்.

கேரள வனத் துறை பகுதியான முல்லைக்கொடி, வனக்காவலை, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டுள்ளது. இங்கு வியாழக்கிழமையன்று (21.07.2014) ஒவ்வொருவாரமும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்வது வழக்கம்தான்.

இதற்காக தமிழக அதிகாரிகள் முல்லைக்கொடிக்கு சென்ற போது கேரளா அதிகாரிகள் அவதூறாக பேசி அனுமதி மறுத்துள்ளனர். கேரளா அரசின் தலைமைச் செயலர் கொடுத்த அனுமதி கடிதத்தைக் காட்டியும் கூட கேரளா அதிகாரிகள், தமிழக அதிகாரிகளை தடுத்துள்ளனர். இதனால் படகில் தேக்கடிக்கு திரும்பிய தமிழக அதிகாரிகளை மற்றொரு படகில் விரட்டி வந்து கேரளா அதிகாரிகள் தாக்கவும் முயற்சித்துள்ளனர். அத்துடன் மீண்டும் வந்தால் கைது செய்வோம் என்று கேரளா அதிகாரிகள் எச்சரித்தும் உள்ளனர். அண்டை மாநில அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தனது அதிகாரிகளை தூண்டிவிட்டு இப்படி அடாவடித்தனத்தில் கேரளா அரசு ஈடுபடுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேரளாவும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான் என்பதை அங்குள்ள அரசு உணர வேண்டும். தமிழகத்தின் ஆற்று நீர் மற்றும் நில எல்லை உரிமைகளைப் பறித்து தமிழகத்துக்கு எதிராக இதுநாள் வரை அப்பாவி பொதுமக்களை தூண்டிவிட்டு வந்தது கேரளா அரசு. இப்போது கேரளா அதிகாரிகளே களத்துக்கு வந்து தமிழக அதிகாரிகளை கைது செய்வோம் என்று மிரட்டியிருப்பது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கேரளாவின் இந்த அத்துமீறலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த பெருமுதலாளிகளின் நிறுவனங்களை அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை இயக்கங்களை ஒன்றுதிரட்டி முற்றுகையிடுவோம்! தமிழகத்தின் நதிநீர் உரிமையை மதித்து தமிழக அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுக்கும் கேரளாவே! தமிழகத்தில் உள்ள கேரளா மாநில உயர் அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கிறோம்! கேரளா அரசின் இந்த சட்டாம்பிள்ளைத் தனத்தை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்!  இத்தகைய அட்டூழிய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கவே கேரளா அரசு முயற்சிக்க முற்படுகிறது என்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே கேரளாவின் இந்த போக்கை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தங்களது வழக்கமான கடமையை செய்வதற்கான சூழ்நிலையை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னையில் 09.08.2014 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இடம்: லாங்ஸ் கார்டன் ரோடு, ஆதித்தனார் சிலை ஜங்ஷன்,எழும்பூர், சென்னை

நாள்: சனிக்கிழமை (09.08.2014), காலை 10 மணி

பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளையும் பொதுமக்களையும் ஆயிரக்கணக்கில் பலி எடுத்திருக்கிற கொடூரம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காஸா பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை இரவென்றும் பகலென்றும் பாராமல் தாக்குதல் நடத்தியது. சர்வதேசம் தடை செய்த அத்தனைவகையாக கொத்து குண்டுகளையும் சராமரியாக வீசி வெறியாட்டம் போட்டது இஸ்ரேல்.

புற்றுநோயை விளைவிக்கும் கிருமிகளைக் கொண்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளையும் அப்பாவி குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி வீசியிருக்கிறது இஸ்ரேல். இந்த குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வழக்கமான போர் பாதிப்பாக இது தெரியவில்லை.. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்திய பெரும் யுத்தம் இது என கொந்தளித்து கூறியிருப்பதெல்லாம் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் மொத்தம் 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 ஆயிரம் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் உச்சகட்ட கொடுமை என்னவெனில், ஐக்கிய நாடுகள் சபை நடத்துகிற பள்ளிகளில் அகதிகளாக தஞ்சமடைந்த பொதுமக்கள் மீது திட்டமிட்டு இலக்கு வைத்து இஸ்ரேல் வெறியாட்டம் போட்ட கொடூரமும் நடந்தேறி இருக்கிறது! இத்தனைக்கும் இஸ்ரேலிடம் 17 முறை இந்த பள்ளிகளில் அகதிகள்தான் தங்கியிருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்த பின்னரும் அந்த பள்ளிகளையே இலக்கு வைத்து கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை ஊடகங்களில் கண்ணீர் கதறலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியே தெரிவிக்கிறார்.

இதன் பின்னரும் இந்தியா உட்பட உலக நாடுகள் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க தயங்குகின்றன. பெயரளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு தங்களது கடமைகள் முடிந்து போனதாக கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது சர்வதேசம். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்திய மத்திய அரசோ, நாடாளுமன்றத்தில் இஸ்ரேலைக் கண்டிக்க முடியாது என்கிறது. மத்திய அமைச்சர்கள் இஸ்ரேலை ஆதரிப்போம் என்று கொக்கரிக்கின்றனர். பாலஸ்தீன விடுதலைக்காக யாசர் அராபத் அவர்களை முதன் முதலாக ஆதரித்த நாடு இந்தியா. இந்தியா எப்போதும் போராடும் பாலஸ்தீனத்து மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. இப்போதும் ஒடுக்கப்படுகிற பாலஸ்தீன மக்களுக்காகவே இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பதுடன், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும் துணிச்சலான நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வெளிப்படையாக பாலஸ்தீன மக்களுக்கான குரலை பிரகடனப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் சனிக்கிழமையன்று (09.08.14) அன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி, சாதி, சமய பேதமின்றி அனைத்து உறவுகளும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் அழைக்கிறேன்.



Read more...

இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், தமிழக முதல்அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவது குறித்து அவதூறான கருத்துக்களுடன் சித்திரம் வெளியிடப்பட்டதை கண்டித்து 02.08.2014 அன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ். சண்முகம், வை.காவேரி, துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், பொருளாளர் அக்ரம்கான், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தொழிற் சங்க தலைவர் சைதை சிவராமன், விருகை வீரராகவன், முத்துராஜ், தேவராஜ். திருவள்ளூர் செந்தில் குமார், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி இலங்கை துணை தூதரகத்தையும் முற்றுகையிட முயன்ற போது  காவல்துறையினர் தடுத்தனர்.  பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 












Read more...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வர், ஒரு நாட்டின் முக்கிய தலைவர் என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக முதல்வர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் வென்று 37 தொகுதிகளைக் கைப்பற்றி அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சியின் தலைவராக திகழ்கிறவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்யும் போதும் கைது செய்து சிறைகளில் அடைக்கிற போதும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் இந்திய மத்திய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு ஜனநாயக கடமை. அத்தகைய ஜனநாயகக் கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தமது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கட்டுரை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் இந்திய நாட்டின் பிரதமர் அவர்களையும் இழிவுபடுத்துகிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை. இது ஒட்டுமொத்த இந்தியாவையே இழிவுபடுத்துவதாகும். 
 
இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டசபையில் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு சிம்ம சொப்பணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அம்மா அவர்கள் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இழிசொற்களால் அவரை அவமதிப்பதை தமிழகம் சகித்துக் கொண்டிருக்காது. இத்தகைய அவதூறுகளை ஆபாச கட்டுரைகளை வெளியிட்டுள்ள சிங்களப் பேரினவாதி ராஜபக்சே கும்பலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து மூடவும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 
 
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இழிவுபடுத்தி பேசுகிற இலங்கைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய பேரரசு துண்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு ஆணை அனுப்பி அவரை நேரில் வரவழைத்து எச்சரிக்க வேண்டும். இத்தகைய இழிவான கட்டுரையை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூடவும் நாளை காலை (02.08.2014) 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழின உறவுகளாய் ஒன்று திரண்டு இலங்கை சிங்கள பேரினவாத ராஜபக்சே கும்பலுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று உரிமையோடு அழைக்கிறேன்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP