நெய்வேலி குடிசைப் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

              நெய்வேலி வட்டம் 21 மற்றும் 30 பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டப் பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 

 சட்டப் பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன், புதன்கிழமை பேரவையில் பேசியது: 

              என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்ற 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி வட்டம் 21, 30-ல் உள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுத்து வருவது வேதனைக்குரிய செய்தி. மேலும் அவர்கள் வசிக்கின்ற இடத்துக்கு அதிக தொகையில் தரை வாடகை கோருகிறார்கள்.  இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக என்.எல்.சி. நிர்வாகத்தை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்திட வேண்டுகிறேன்.  மேலும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். 

            மாநில அரசின் கல்வித்துறை வழங்குகின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்க மறுக்கிறார்கள்.  என்.எல்.சி.யில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட பணி நேரம் என்பது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5,30 வரை பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் அடக்குமுறை நடைபெறுகிறது. இந்த நிலைகளை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

               மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிமருந்துகளால், சுரங்கப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களான வானதிராயபுரம், தென்குத்து கிராமங்களில் உள்ள வீடுகள் குலுங்கின்றன. ஆடு, மாடுகள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கையகப்படுத்தும் வீடுகளுக்கு மாற்றிடம் தர மறுக்கிறார்கள்.  இதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராட்ட நடவடிக்கையில் ஈடுபட நேரிடுகிறது. 

               ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இதை பொருட்படுத்திக் கொள்வதில்லை.  எனவே என்.எல்.சி. நிறுவனத்தினரை அழைத்து பேசி, இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இத் தருணத்தில் கேட்டுகொள்வதாக வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP