ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்: எம்.எல்.ஏ.வேல்முருகன் பங்கேற்ப்பு
வெள்ளி, 28 ஜனவரி, 2011
அரியலூர்:
சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் நடந்த ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமுக்கு, பா.ம.க., மாவட்ட தலைவர் வைத்தி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பாலு வரவேற்றார். மாநில தலைவர் மணி, எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினர்.
பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் பேசியது:
வரும் சட்டசபை தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், இந்த தொகுதி பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச்செய்வது உங்கள் கடமை.சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.
தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.தொடர்ந்து பா.ம.க., சார்பில் விளையாட்டு குழு அமைத்து, நாள்தோறும் மாலையில் வாலிபால், சடுகுடு, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை நடத்த வேண்டும்.கல்விக்குழு, விவசாயக்குழு, மருத்துவக்குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கிராமத்துக்கு வேண்டிய அடிப்படை தேவை கிடைக்க பாடுபட்டால் கட்சி வலுவாக இருக்கும்.ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை நானே முன்னின்று காடுவெட்டி குரு தலைமையில் நடத்துவேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக