வெள்ளச் சேதம் பாமக குழு பார்வையிடும்: ஜி.கே. மணி
செவ்வாய், 7 டிசம்பர், 2010
அரக்கோணம்:
வெள்ளச் சேதங்களை பாமகவின் ஐவர் குழு பார்வையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறினார்.
சோளிங்கரில் திங்கள்கிழமை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியது:
கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிக அளவில் உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் உத்தரவின்பேரில், இம்மாவட்டங்களில் கட்சியின் ஐவர் குழு 7-ம் தேதி முதல் பார்வையிட உள்ளது. எனது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, பொன்னுசாமி, எம்எல்ஏக்கள் பெரியசாமி, வேல்முருகன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ள 100 கோடியை அதிகரிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும்.
பாலாற்றில் தண்ணீர் வரவில்லை:
தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், பாலாற்றில் மட்டும் தண்ணீர் வரவில்லை. இதற்கு குப்பம் தொகுதியில் உள்ள கணேசபுரத்தில் ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணையே காரணம். எனவே, அந்த தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்
"உன்னையே நீ அறிவாய்' ஆலோசனைக் கூட்டம்:
தீய சக்தி, பண்பாட்டு சீரழிவில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்களை காப்பாற்ற "உன்னையே நீ அறிவாய்' எனும் ஆலோசனைக் கூட்டங்கள் பாமக சார்பில் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இத்தகைய கூட்டங்களை நடத்த உள்ளோம். தற்போது 22 தொகுதிகளில் இக்கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக